< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்லில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

திண்டுக்கல்லில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்

தினத்தந்தி
|
9 Jan 2023 12:15 AM IST

திண்டுக்கல்லில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். இதையடுத்து சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மர்ம காய்ச்சல்

திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது புதிதாக பாக்டீரியாக்கள் மூலம் ஒரு வகை மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. 'ஸ்க்ரப் டைபஸ்' என்றழைக்கப்படும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, உடல்வலி மற்றும் கை, கால் உள்ளிட்ட உடல் பாகங்களை தொடர்ந்து சொறிவது போன்ற அறிகுறிகள் காணப்படும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே அறிகுறிகளுடன் திண்டுக்கல் காந்திஜிநகரை சேர்ந்த 55 வயது உடைய ஆண் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த 45 வயது பெண் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

மேலும் இதே அறிகுறிகளுடன் சிலர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மர்ம காய்ச்சல் வேகமாக பரவுவதை அறிந்ததும் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை செய்வது, அவர்கள் வசிக்கும் பகுதியில் பிளிச்சிங் பவுடர் கரைசலை தெளிப்பது, புதர்களை அகற்றுவது போன்ற சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பாக்டீரியாவால் பரவும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவர்களின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கும். ரத்தப்போக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்