< Back
மாநில செய்திகள்
விற்று தருவதாக கூறி ரூ.30 லட்சம் செல்போன்களுடன் மாயமான வாலிபர் மும்பையில் சிக்கினார்
சென்னை
மாநில செய்திகள்

விற்று தருவதாக கூறி ரூ.30 லட்சம் செல்போன்களுடன் மாயமான வாலிபர் மும்பையில் சிக்கினார்

தினத்தந்தி
|
5 Sept 2023 1:42 PM IST

விற்று தருவதாக கூறி ரூ.30 லட்சம் மதிப்புள்ள செல்போன்களுடன் மாயமான வாலிபரை மும்பையில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் சந்திரபோஸ் (வயது 42). இவர், செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர், அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

திருமுல்லைவாயலை சேர்ந்த அரவிந்த் (32) என்பவர் எனது கடைக்கு வந்து, விலை உயர்ந்த செல்போன்களை வாங்கி சென்று விற்பனை செய்து தருவதாக கூறினார். அதனை நம்பி ரூ.30 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கொடுத்தேன். செல்போன்களை வாங்கி சென்ற அரவிந்த், பின்னர் தலைமறைவாகி விட்டார். செல்போன்களையும் தரவில்லை. அதற்கான பணத்தையும் தரவில்லை. அவரை கண்டுபிடித்து, செல்போன்களை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இந்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படைகள் அமைத்து அரவிந்தனின் செல்போன் சிக்னல்களை வைத்து தேடினர். அதில் அவர், மும்பையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக மும்பைக்கு சென்ற தனிப்படை போலீசார் அரவிந்தனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் வெளிநாடுகளில் இருந்து வரும் விலை உயர்ந்த செல்போன்களை குறைந்த விலைக்கு வாங்கும் கடைகளை நோட்டமிட்டு, அந்த கடைக்காரர்களிடம் செல்போன்களை விற்பனை செய்து தருவதாக கூறி வாங்கி சென்று ஏமாற்றி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், மேலும் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்