விழுப்புரம்
மான் கொம்பை அறுத்து சென்ற மர்ம நபர்கள்
|செஞ்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மான் கொம்பை அறுத்து சென்ற மர்ம நபர்கள் வனத்துறையினர் தீவிர விசாரணை
செஞ்சி
செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள காப்பு காட்டில் இருந்து புள்ளி மான் ஒன்று தினமும் பகலில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்கு வந்து இரை மேய்ந்து விட்டு இரவு காட்டுக்குள் சென்று விடும். பகல் நேரங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்குள் வரும்போது அங்கே வரும் சிறுவர், சிறுமியர்களுடன் அந்த மான் துள்ளி விளையாடி வந்தது. மேலும் அவர்கள் கொடுக்கும் புல் உள்ளிட்ட உணவுகளையும் உண்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் அந்த மான் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்துக்கு வந்தது. ஆனால் மானின் தலையில் இருந்த 2 கொம்புகளை காணாமல் பொதுமக்களும், அலுவலக ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சிலர் அருகில் சென்று பார்த்தபோது அதன் இரு கொம்புகளையும் யாரோ மர்ம நபர்கள் அறுத்து எடுத்து சென்றது தெரியவந்தது. கொம்பு அறுத்த இடத்தில் காயம் இருந்ததால் மான் சுறு சுறுப்பின்றி அயர்ந்தபடியே நடந்து சென்றது.
அருகில் கால்நடை மருத்துவமனை உள்ளதால் சமூக ஆர்வலர்கள் அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்களோ அந்த மானுக்கு சிகிச்சை அளிக்குமாறு பொது மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மான் கொம்புகளை அறுத்து சென்ற மர்ம நபர் குறித்து வனத்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.