புதுக்கோட்டை
குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய மர்ம நபர்கள்
|குடிநீர் தொட்டியை மர்ம நபர்கள் அசுத்தப்படுத்தினர்.
அன்னவாசல்:
ஒவ்வாமையால் பாதிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கைவயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக வேங்கைவயலில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் மற்றும் 3 சிறுமிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகவும், இதில் ஒரு சிறுமி தற்போதும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்சினை இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
தொட்டியில் அசுத்தம்
இதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த சிலர் நேற்று நீர்த்தேக்க தொட்டியில் ஏறி பார்த்தபோது, அந்த தொட்டியில் உள்ள தண்ணீர் அசுத்தம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அங்கு குவிந்தனர். இதையடுத்து அங்கு அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், வெள்ளனூர் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
ேமலும் சின்னதுரை எம்.எல்.ஏ., குளத்தூர் தாசில்தார் சக்திவேல் ஆகியோர் அங்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் லாசர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதையடுத்து குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீர் உடனடியாக வெளியேற்றப்பட்டதோடு, அப்பகுதி மக்களுக்கு வேறு குடிநீர் வழங்கப்பட்டது.
போலீசார் விசாரணை
மேலும் போலீசார் மற்றும் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிவில்தான் உண்மை நிலை தெரியவரும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து சின்னதுரை எம்.எல்.ஏ. கூறுகையில், இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை தொடர்ந்து வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இழிவான சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவம் தொடராமல் இருக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்றார்.
வேண்டுமென்றே...
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி இருந்தோம். நீண்ட போராட்டத்துக்கு பின்னர் கடந்த 2016-17-ம் ஆண்டில் பிரத்யேகமாக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. தொட்டியின் மேல் உள்ள மூடியை திறக்க பெரியவர்களால் மட்டுமே முடியும். எனவே, வேண்டுமென்றே இத்தகைய செயலில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம், என்றனர்.