திருச்சி
துப்பாக்கி முனையில் அரியலூர் தொழிலதிபரை மிரட்டிய மர்ம நபர்
|துப்பாக்கி முனையில் அரியலூர் தொழிலதிபரை மர்ம நபர் மிரட்டினார்.
மிரட்டினார்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள உடையார்பாளையத்தை சேர்ந்தவர் சத்யன்(வயது 33). இவர் உடையார்பாளையத்தில் மரத்தால் ஆன வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து, விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று, சாமி கும்பிட்டு விட்டு, மீண்டும் ஊருக்கு செல்வதற்காக தனது காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
இரவு 10.30 மணி அளவில் திருச்சி சஞ்சீவி நகரில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு காரை நிறுத்திவிட்டு தனது குடும்பத்துடன் சாப்பிட செல்ல முயன்றார். அப்போது திடீரென முகத்தில் துணியை கட்டியபடி கருப்பு சட்டை அணிந்து கொண்டு காரில் ஏறிய மர்ம நபர், சத்யனின் மகன் சாய்தினாவின் கழுத்தில் துப்பாக்கி போன்ற ஒரு ஆயுதத்தை வைத்து மிரட்டி, உடனடியாக காரை எடுக்குமாறும், இல்லையென்றால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
போலீசார் விசாரணை
இதனைக் கண்டு அச்சமடைந்த சத்யனின் மனைவி சத்தம் போட்டார். இதையடுத்து அருகில் இருந்த காவலாளி மற்றும் பொதுமக்கள் கார் அருகே விரைந்து வந்தனர். இதைக்கண்ட முகமூடி அணிந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து சத்யன் கோட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டபோது, அந்த மர்ம நபர் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆட்டோவை ஓட்டி வந்த அரியமங்கலம் தொழிற்பேட்டை காலனியை சேர்ந்த டிரைவர் ஸ்டாலின் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.