
திண்டுக்கல்
திருடிய செல்போன்களை வீசிசென்ற மர்ம நபர்கள்

பட்டிவீரன்பட்டி அருகே திருடிய செல்போன்களை அதே பகுதியில் மர்ம நபர்கள் வீசி சென்றதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சங்காரெட்டிகோட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரன், செல்வம், சிவசந்திரன், முத்து, கமலகண்ணன். இவர்கள் வத்தலக்குண்டு அருகே உள்ள மில் வேலைக்கு சென்றுவிட்டு, சங்காரெட்டிகோட்டையில் உள்ள செல்வம் வீட்டுக்கு சென்றனர். அங்கு கதவை திறந்து வைத்து 5 பேரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் வீடு புகுந்து 5 பேரின் செல்போன்களை திருடி சென்றனர். காலையில் அவர்கள் எழுந்தபோது செல்போன்கள் திருடு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் பட்டிவீரன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேற்று விசாரணை நடத்தினர். இதை அறிந்த மர்ம நபர்கள் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று பயந்து திருடிய 5 செல்போன்களை செல்வம் வீடு அருகே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். அந்த செல்போன்களை போலீசார் கைப்பற்றினர். பின்னர் பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேசன், அந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். மேலும் செல்போன்களை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.