திருவள்ளூர்
தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி மர்ம சாவு; போலீசார் விசாரணை
|திருவள்ளூர் அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி மர்ம சாவு குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் அருகே தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியின் விடுதியில் திருவாரூர் மாவட்டம், வேளாண்குடி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் ஹரிணிகா(வயது 16) தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஹரிணிகாவிற்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மாணவிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் மரணத்திற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.