திருவள்ளூர்
ஆர்.கே.பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர் மர்ம சாவு - கொலையா? போலீஸ் விசாரணை
|ஆர்.கே.பேட்டையில் கார் உதிரிபாக நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் சுந்தரராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 29). இவர் திருவள்ளூர் அருகே பன்னூர் கூட்ரோட்டில் உள்ள தனியார் கார் உதிரிபாக நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து காயத்ரி (27) என்ற மனைவியும், ஜீவிதா (2) என்ற மகளும் உள்ளனர். காயத்ரி தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யுவராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அவரது கழுத்தில் நகக்கீறல்களும், காயங்களும் காணப்பட்டன.
இது குறித்து யுவராஜின் தந்தை ஆறுமுகம் ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், தனது மருமகளே தனது மகன் சாவுக்கு காரணம் என்றும் அவர் அதில் குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆர்.கே. பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து யுவராஜின் மனைவி காயத்ரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யுவராஜ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யுவராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.