< Back
மாநில செய்திகள்
அம்பத்தூர் அருகே தனியார் நிறுவனத்தில் 2 தொழிலாளர்கள் மர்ம சாவு - மின்சாரம் தாக்கி இறந்தார்களா?
சென்னை
மாநில செய்திகள்

அம்பத்தூர் அருகே தனியார் நிறுவனத்தில் 2 தொழிலாளர்கள் மர்ம சாவு - மின்சாரம் தாக்கி இறந்தார்களா?

தினத்தந்தி
|
21 Aug 2022 5:21 PM IST

அம்பத்தூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் இரவு பணியில் ஈடுபட்டு இருந்த 2 தொழிலாளர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 31). இவர், சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம், ஐ.சி.எப். காலனியில் தங்கி, பட்டரவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதேபோல் இவரது பக்கத்து நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய்குமார்.

நேற்று முன்தினம் இரவு பட்டரவாக்கம், பார்மின் தெருவில் உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் முருகன் என்பவர், தான் அவசர வேலையாக மதுரை செல்ல இருப்பதாகவும், தமது நிறுவனத்தில் வேலை அதிகமாக இருப்பதால் சரவணகுமாரையும், சஞ்சய்குமாரையும் இரவு வேலை செய்ய தனது நிறுவனத்துக்கு வரும்படி அழைத்தார். இதையடுத்து முருகன் நிறுவனத்தில் சரவணகுமாரும், சஞ்சய்குமாரும் நேற்று முன்தினம் இரவு வேலை செய்தனர்.

இந்தநிலையில் சரவணகுமாரின் மாமாவான சென்னையில் வசிக்கும் கண்ணன் என்பவர், நீண்டநேரம் போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. இதனால் நேற்று காலை நேரடியாக அவர் சரவணகுமார் இரவு பணி செய்து வந்த தனியார் நிறுவனத்துக்கு சென்று பார்த்தார்.

அப்போது நிறுவனத்தின் உள்ளே சரவணகுமார், சஞ்சய்குமார் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்துவந்த அம்பத்தூர் எஸ்டேட் போலீசார், 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் இருவரும் மின்சாரம் தாக்கி இறந்து இருக்கலாம் எனவும், எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இருவரின் சாவுக்கான உண்மையான காரணம் என்ன? என்பது தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்