சேலம்
அயோத்தியாப்பட்டணம் அருகே வாலிபர் மர்ம சாவுபோலீசார் விசாரணை
|அயோத்தியாப்பட்டணம்
அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த கூட்டாத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் நித்தியானந்தம் (வயது 21). இவர், அதே பகுதியில் உள்ள நடராஜ் என்பவருக்கு சொந்தமான காளை மாட்டை தான் அடக்குவதாக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் நடராஜ் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நித்தியானந்தத்தை தாக்கியுள்ளார். இது குறித்து நித்தியானந்தம் தந்தை கண்ணனிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நித்தியானந்தம், நேற்று காலை பார்த்த போது இல்லாததால் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் பெற்றோர் தேடி உள்ளனர்.
அப்போது, அதே பகுதியில் ஆற்றங்கரையோரத்தில் உள்ள புளிய மரத்தில் நித்தியானந்தம் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும், நித்தியானந்தம் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவருடைய தந்தை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.