ஈரோடு
கர்நாடகாவில் ஆட்டோவில் மர்மபொருள் வெடிப்பு: ஈரோடு மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
|கர்நாடகாவில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்ததால் ஈரோடு மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதுடன், தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள ஆசனூர், பர்கூர் சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்ததால் ஈரோடு மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதுடன், தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள ஆசனூர், பர்கூர் சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மர்ம பொருள் வெடிப்பு
கர்நாடக மாநிலம் மங்களூர் நாகுரி பகுதியில் நேற்று முன்தினம் ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்தது. இந்த வெடி வெடிப்பு தொடர்பாக கர்நாடகா மாநிலம் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கர்நாடகா மாநில எல்லைகளிலும் நள்ளிரவு சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 12 சோதனை சாவடிகளிலும் போலீசார் நேற்று முன்தினம் இரவு முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினார்கள். குறிப்பாக கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அந்தியூர்- தாளவாடி
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் தமிழ்நாடு கர்நாடக எல்லை பகுதியில் தட்டகரை போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் பர்கூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த அனைத்து வாகனங்களையும் முழுவதுமாக சோதனை செய்த பின்னர்தான் தமிழகத்துக்குள் போலீசார் அனுமதித்தனர்.
இதேபோல் தாளவாடியை அடுத்த தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள ஆசனூர் சோதனை சாவடியிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.