< Back
மாநில செய்திகள்
மாயமான 4 வயது சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்பு
விழுப்புரம்
மாநில செய்திகள்

மாயமான 4 வயது சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்பு

தினத்தந்தி
|
13 March 2023 12:15 AM IST

விழுப்புரம் அருகே மாயமான 4 வயது சிறுவன் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

செஞ்சி

தேசிய ஊரக வேலை

விழுப்புரம் அருகே உள்ள கெடார் என்ற ஊரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவருக்கு திருமணமாகி மோனிஷா என்ற மனைவியும், சஜித்(வயது 4) என்ற மகனும், நிரஞ்சனா(2½) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மோனிஷா தனது மகன், மகளை அழைத்துக்கொண்டு அதே ஊரில் சுடுகாடு அருகே நடைபெற்ற தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட வேலைக்கு சென்றார். அங்கு குழந்தைகள் இருவரையும் அருகே அமர வைத்து விட்டு மோனிஷா வேலை செய்துகொண்டிருந்தார்.

மகனை கண்டித்தார்

குழந்தைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது நிரஞ்சனாவை, சஜித் அடித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவனை மோனிஷா கண்டித்து விட்டு மீண்டும் வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது சஜித்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மோனிஷா பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் மகனை காணவில்லை.

கிணற்றில் பிணம்

இந்நிலையில் நேற்று காலையில் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சிறுவனின் பிணம் மிதந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தகவல் தெரிவித்தனர். உடனே மோனிஷா தனது உறவினர்களுடன் விரைந்து சென்று பார்த்தபோது கிணற்றில் பிணமாக மிதந்தது காணாமல் போன சஜித் என்பது தெரியவந்தது. அவனது உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.

பின்னர் இது பற்றிய தகவல் அறிந்து வந்த கெடார் போலீசார் சஜித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கிணற்றில் சஜித் தவறி விழுந்து இறந்தானா? அல்லது அவனை யாரேனும் கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்தார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே கிணற்றில் இருந்து 4 வயது சிறுவன் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்