'அரசியல் வேண்டாம் என்பதே என்னுடைய கொள்கை' - ராகவா லாரன்ஸ்
|அரசியல் வேண்டாம் என்பதே தன்னுடைய கொள்கை என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை,
'சேவையே கடவுள்' என்ற பெயரில் அறக்கட்டளையை நடிகர் ராகவா லாரன்ஸ் துவங்கியுள்ளார். இதில் 'மாற்றம்' என்ற பெயரில் விவசாயிகளுக்கு டிராக்டர்களை வழங்கி வருகிறார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கள்ளனேந்தல் பகுதியில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ், அரசியல் வேண்டாம் என்பதே தன்னுடைய கொள்கை என்று தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது;-
"மக்கள் என்னை எம்.எல்.ஏ. ஆக்க வேண்டும், முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும் என எதையும் எதிர்பார்த்து நான் உதவி செய்யவில்லை. இது கடவுளுக்கு செய்யும் சேவை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். என்னை விட என் தாயார் மிகத் தெளிவாக இருக்கிறார்.
எனக்கு கூட கொஞ்சம் அரசியல் ஆசை இருந்தது. ஆனால் என் அம்மா அரசியல் எல்லாம் வேண்டாம் என்று தெளிவாக கூறிவிட்டார். நான் உதவி செய்வது அரசியலுக்காக அல்ல. அனைவரும் அரசியலுக்கு வந்துவிட்டு கொள்கையை சொல்வார்கள். நான் இப்போதே சொல்கிறேன், அரசியல் எனக்கு வேண்டாம் என்பதே என்னுடைய கொள்கை."
இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.