இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ரமலான் பெருநாள் வாழ்த்துகள் - டி.டி.வி. தினகரன்
|நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளையும், நற்பண்புகளையும் பின்பற்றி வாழ்வில் உயர்ந்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்.
சென்னை,
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
ஈகைத் திருநாளான ரமலான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ரமலான் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இறை உணர்வோடு எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டி ஏழை, எளியோரின் ஏழ்மையை போக்கிட உணவும், செல்வமும் வழங்கி சிறப்பு தொழுகைகள் மூலம் இறைவனை வழிபட்டு, ரமலான் பெருநாளை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களின் எண்ணங்கள் அனைத்தும் இந்த ரமலான் பெருநாளில் நிறைவேறட்டும்.
அன்பு, கருணை, ஈகை, மனிதநேயம் போன்ற நற்பண்புகளை போதித்தது மட்டுமல்லாமல் அதன்படி வாழ்ந்தும் காட்டிய மனித குலத்தின் வழிகாட்டி இறை தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளையும், நற்பண்புகளையும் பின்பற்றி வாழ்வில் உயர்ந்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்.
ரமலான் பெருநாளில் அனைவரது உள்ளங்களிலும் அன்பும், மகிழ்ச்சியும், சகோதரத்துவமும் பெருகுவதோடு, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்தோங்க வேண்டும் எனக்கூறி இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை ரமலான் வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.