பெரம்பலூர்
முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
|மங்களமேடு அருகே முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகேயுள்ள தேவையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன், செல்லியம்மன், விநாயகர், அய்யனார், மருதையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 13-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
இதையடுத்து, 14-ந் தேதி இரவு பம்பை குழு காலியாட்டமும், 15-ந் தேதி இரவு செல்லியம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் கரகாட்டமும், 16-ந் தேதி இரவு பூ அலங்காரம், கும்மி ஆட்டமும் நடைபெற்றது. 17-ந் தேதி இரவு பூ அலங்காரமும், கோலாட்டமும், 18-ந் தேதி இரவு தப்பாட்டமும், 19-ந் தேதி இரவு பம்பை ஆட்டமும், 20-ந் தேதி இரவு பூ அலங்காரமும், மாவிளக்கு மற்றும் தப்பாட்டமும் நடைபெற்றது.
இதையடுத்து, நேற்று காலை 10 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் எழுந்தருளினார். இந்த தேரை பொதுமக்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். இதில், தேவையூர், வாலிகண்டபுரம், மங்களமேடு, ரஞ்சன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் தேர் அதன் நிலையை அடைந்தது. இதனைதொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மஞ்சள் நீராட்டு விழாவும், அதனைத்தொடர்ந்து காப்பு அறுத்தல் மற்றும் அம்மன் நாடகத்துடன் விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.