தமிழகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும், மறுத்தால் ரூ.50 லட்சம் அபராதம் - மருத்துவருக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு
|தமிழகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்ற மறுத்தால் ரூ.50 லட்சம் செலுத்த வேண்டும் என்று மருத்துவருக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
நெல்லையில் மருத்துவ மேற்படிப்பு படித்துவிட்டு தமிழகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்ற மறுத்தால் ரூ.50 லட்சம் செலுத்துமாறு கேரள மருத்துவருக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரவி என்ற மருத்துவர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அகில இந்திய இட ஒதுக்கீட்டின் கீழ் நெல்லை மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் பட்ட மேற்படிப்பு பயின்றதாக கூறியுள்ளார்.
படிப்பை முடித்தவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தமிழகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் அல்லது ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்று தனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள மருத்துவர் அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்த போது 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் அல்லது ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசு நிர்ணயித்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மனுதாரர் தமிழகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்றும் மறுத்தால் ரூ.50 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.