திருவாரூர்
பணிநிரந்தரம் செய்ய வேண்டும்
|ஒப்பந்த கொள்முதல் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிலாளர் முன்னேற்ற சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மண்டல பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மண்டல தலைவர் வெற்றிச்செல்வன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் ராஜேந்திரன், மண்டல பொருளாளர் சுரேந்தர், மண்டல கவுரவ தலைவர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொதுச்செயலாளர் ஜெயசங்கர், மாநில இணை பொதுச்செயலாளர் மருந்தன், மாநில பொருளாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மகளிர் உரிமை தொகை ரூ.1000, காலை உணவு திட்டம் கொண்டு வந்த முதல்-அமைச்சருக்கு பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்து கொள்வது. கொள்முதல் ஊழியர்களுக்கு பணிநிரந்தரம், வாரிசுகளுக்கு காலதாமதமின்றி கருணை அடிப்படையில் பணி வழங்கிய அரசிற்கு நன்றியை தெரிவித்து கொள்வது. ஒப்பந்த கொள்முதல் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களில் நேரடி நியமனங்களை ரத்து செய்து பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.