சென்னை
மழையால் விமானம் திருப்பி விடப்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் 6 மணி நேரம் காத்திருந்த இளையராஜா
|மழையால் இளையராஜா சென்னை விமான நிலையத்தில் 6 மணி நேரம் காத்திருந்து, பின்னர் துபாய் புறப்பட்டுச் சென்றார்.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா எம்.பி., துபாய் வழியாக ஹங்கேரி செல்வதற்காக நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். சென்னையில் இருந்து இரவு 9.45 மணிக்கு துபாய் விமானம் புறப்பட்டு செல்ல வேண்டும். ஆனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்று, இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. இதனால் துபாயில் இருந்து வந்த விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து துபாய்க்கு இரவு 9.45 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் அந்த விமானத்தில் செல்ல இருந்த இளையராஜா உள்ளிட்ட பயணிகள் விமான நிலைய ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனர். சென்னையில் மழை ஓய்ந்து வானிலை சீரானதும் ஐதராபாத்துக்கு திருப்பிவிடப்பட்ட விமானம் இரவு 11.30 மணிக்கு மீண்டும் சென்னை திரும்பியது. இதையடுத்து சென்னையில் இருந்து நள்ளிரவு 1.45 மணிக்கு அந்த விமானம் துபாய் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் இளையராஜா உள்ளிட்ட பயணிகள் புறப்பட்டு சென்றனர்.
மழையால் விமானம் திருப்பி விடப்பட்டதால் சென்னை விமான நிலைய வி.ஐ.பி. ஓய்வறையில் சுமார் 6 மணி நேரம் இளையராஜா காத்திருந்தார்.
2-வது நாளாக நேற்று மாலையும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து 178 பயணிகளுடன் வந்த விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
விசாகப்பட்டினம், கொச்சி, ராஜமுந்திரி ஆகிய நகரங்களில் இருந்து வந்த விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் வானிலே வட்டமடித்து தாமதமாக தரையிறங்கியது.