கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை
|கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயிற்சி
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் கிருஷ்ணகிரியில் மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பாரம்பரிய கலைகளான குரலிசை, நாதசுவரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பள்ளி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முழுநேர பள்ளியாக செயல்படுகிறது. 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி காலை 3 ஆண்டுகள் ஆகும்.
உதவித்தொகை
பயிற்சி முடிவில் தமிழ்நாடு தேர்வுத்துறையால் தேர்வு நடத்தி அரசுத் தேர்வுகள் இயக்குனரால் இசைப் பள்ளி தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் எதுவும் இல்லை. சிறப்பு கட்டணமாக ஆண்டிற்கு ரூ.350 மட்டும் செலுத்த வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு அரசு டவுன் பஸ்சில் பயணச்சலுகை உண்டு. அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலைகளை படிப்பதற்கு உரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் சேர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பள்ளியில் சேர விரும்புவோர் உடனடியாக தலைமை ஆசிரியர் (பொறுப்பு), மாவட்ட அரசு இசைப்பள்ளி, லண்டன்பேட்டை, பழைய பெங்களூரு சாலை (பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு எதிரில்), கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.