< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

முருகன் கோவில் வைகாசி விசாக தேரோட்டம்

தினத்தந்தி
|
2 Jun 2023 3:39 PM GMT

விராலிமலை முருகன் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

முருகன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் முருகன் ஆறுமுகங்களுடன் வள்ளி மற்றும் தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவில் அருணகிரிநாதருக்கு முருகன் அஷ்டமாசித்திகளை வழங்கி திருப்புகழ் பாட செய்த தலமாகவும் விளங்கி வருகிறது.

இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வெள்ளி குதிரை வாகனத்தில்...

தொடர்ந்து அன்று முதல் காலை, மாலை என இரு வேளைகளிலும் மஞ்சம், பத்மமயில், கேடயம், நாகம், பூதம், யானை, சிம்மம், வெள்ளி குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருக பெருமான் வள்ளி-தெய்வானையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். நேற்று மாலை முருக பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் தனது மாமனான பெருமாள் வசிக்கும் ஊரான விராலூரில் எழுந்தருளி அங்கு மண்டகபடி முடித்து இன்று அதிகாலை விராலிமலை வந்தடைந்தார்.

தேரோட்டம்

இதைதொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரங்களில் காலை 7.15 மணிக்கு விநாயகர் சிறிய தேரிலும், முருக பெருமான் வள்ளி-தெய்வானையுடன் பெரிய தேரிலும் எழுந்தருளினர். காலை 10.15 மணிக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது திரளான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதையடுத்து தேர் 4 ரத வீதிகள் வழியாக அசைந்தாடி வந்து மதியம் 12.05 மணிக்கு கோவில் நிலையை வந்தடைந்தது.

நாளை தெப்ப உற்சவம்

தேரோட்டத்தையொட்டி நான்கு ரத வீதிகளிலும் ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர் மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துராமன் தலைமையில் மண்டகபடிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்திரி தலைமையில் போலீசார் செய்திருந்தனர். நாளை (சனிக்கிழமை) மதுரை சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) விடையாற்றியுடன் வைகாசி திருவிழா நிறைவடைகிறது.

மேலும் செய்திகள்