கடலூர்
முருகன் கோவில் கும்பாபிஷேகம்
|புதுப்பேட்டை அருகே முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
புதுப்பேட்டை,
புதுப்பேட்டை அருகே ஒறையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பலாப்பட்டு கிராமத்தில் வெற்றிவேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதிதாக 21 அடி உயர வெற்றிவேல் முருகன் சிலை அமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, நவகிரக யாகம், லட்சுமி யாகம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை நடந்து, கடம் புறப்பாடு தொடங்கி, 21 அடி உயர வெற்றிவேல் முருகன் சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சாமிவீதி உலா நடைபெற்றது.