செய்தியாளர் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
|குற்றவாளிகளை விரைந்து கைது செய்து தண்டிப்பதுடன், தவறிழைத்த காவலர்கள் மீதும் துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் பணியாற்றிவரும் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு மீது சமூக விரோதிகள் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொலைவெறித் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தியாளர் நேச பிரபு காமநாயக்கன் பாளையம் கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவர் வெளியிட்ட செய்திக்காக இரண்டு நாட்களாக பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் நம்பர் பிளேட் இல்லாத வாகனத்திலும் காரிலும் வந்து சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர் போலீசாரிடம் புகார் தெரிவித்து பாதுகாப்பு கோரியுள்ளார். இருப்பினும் சமூக விரோத சக்திகள் அவருடைய வீட்டிற்கு அருகிலேயே காத்திருந்துள்ளனர். நிலைமையை உணர்ந்த நேச பிரபு அங்கிருந்து தப்பி அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று அங்கிருந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் அங்கே புகுந்த சமூக விரோதிகள் சரமாரியாக அவரை வெட்டிவிட்டு தப்பித்துள்ளனர். கொலை வெறிகொண்ட இந்த தாக்குதலில் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே செய்தியாளர் புகார் கொடுத்துவந்த நிலையில் உள்ளூர் காவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டிருப்பின் இந்த கொலைவெறித் தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பில்லை. உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளாதது சமூக விரோத சக்திகளுக்கு உதவியாக ஸ்தல காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர் என்பது தெரிகிறது. எனவே, குற்றவாளிகளை விரைந்து கைது செய்து தண்டிப்பதுடன், தவறிழைத்த காவலர்கள் மீதும் துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவருக்கு உரிய சிகிச்சையை அளிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.