< Back
மாநில செய்திகள்
கொலையாளி சப்பாணிக்கு மேலும் 3 ஆயுள் தண்டனை; திருச்சி கோர்ட்டு தீர்ப்பு
திருச்சி
மாநில செய்திகள்

கொலையாளி சப்பாணிக்கு மேலும் 3 ஆயுள் தண்டனை; திருச்சி கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
18 Aug 2023 1:52 AM IST

கொலையாளி சப்பாணிக்கு மேலும் 3 ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

டிரைவர் கொலை

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே வேங்கூரை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 36). இவர் ரெயில்வேயில் ஒப்பந்த முறையில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற தங்கதுரை மீண்டும் வீடு திரும்பவில்லை. இது பற்றி அவரது மனைவி வினோதினி திருவெறும்பூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். அப்போது அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந் தேதி கிருஷ்ணசமுத்திரம் பத்தாளப்பேட்டை மெயின்ரோட்டில் உள்ள கோவில் அருகே வாய்க்காலில் துர்நாற்றம் வீசுவதாக கிராம நிர்வாக அதிகாரி செல்வகணேஷ் கொடுத்த தகவலின்பேரில், போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வாய்க்காலில் ஆண் பிணம் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

திடுக்கிடும் தகவல்கள்

அந்த உடலை தோண்டி எடுத்து பார்த்தபோது, அது மாயமான தங்கதுரை என்பதும், அவரது தலையில் கல்லைப்போட்டு கொன்று உடலை புதைத்து இருந்ததும் தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில் தங்கதுரையின் செல்போனை கிருஷ்ணசமுத்திரத்தை சேர்ந்த அவரது நண்பரான சப்பாணி (43) பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சப்பாணியை பிடித்து விசாரித்தபோது, தங்கதுரை அணிந்து இருந்த 3 பவுன் சங்கிலிக்காக அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சப்பாணியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

உடல்கள் புதைப்பு

சப்பாணி பல்வேறு காலகட்டங்களில் தங்கதுரை உள்பட திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தை சேர்ந்த கோகிலா (70), பாப்பாக்குறிச்சியை சேர்ந்த அற்புதசாமி (70), கீழகுமரேசபுரத்தை சேர்ந்த விஜய்விக்டர் ராஜ்(27), கூத்தைப்பாரை சேர்ந்த சத்தியநாதன் (45), பெரியசாமி (75), வடகாட்டை சேர்ந்த கவுன்சிலர் குமரேசன் (50) மற்றும் சப்பாணியின் தந்தை தேக்கன் (75) ஆகிய 8 பேரையும் கொலை செய்து உடல்களை பல்வேறு இடங்களில் புதைத்ததாகவும், தங்க நகைகளுக்காகவும், பணத்துக்காகவும் அவர் இந்த கொலைகளை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து சப்பாணியை கைது செய்த போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்கு சப்பாணியை அழைத்து சென்று, ஒவ்வொரு உடலாக தோண்டி எடுத்து அந்தந்த இடத்திலேயே பரிசோதனை செய்தனர்.

வாழ்நாள் சிறை

இதில் தங்கதுரை, சத்தியநாதன், தேக்கன், குமரேசன், விஜய் விக்டர்ராஜ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நீதிபதி பாபு முன்னிலையில் தனித்தனியாக நடைபெற்று வந்தது.

முதற்கட்டமாக சத்தியநாதன், தங்கதுரை ஆகியோரை கொலை செய்த 2 வழக்குகளில் கடந்த 7-ந் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அதில் சப்பாணிக்கு ஆயுட்காலம் முழுவதும் சிறை தண்டனை விதித்தும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அதை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து சப்பாணியை பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைத்தனர்.

மேலும் 3 ஆயுள் தண்டனை

இதனை தொடர்ந்து சப்பாணியின் தந்தை தேக்கன், குமரேசன், விஜய்விக்டர்ராஜ் ஆகிய 3 பேரை கொலை செய்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து, மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நேற்று தீர்ப்புக்காக வந்தது. இந்த வழக்கில் நீதிபதி பாபு நேற்று தீர்ப்பு கூறினார். இதில், குமரேசனை கொலை செய்த வழக்கில், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 364 (ஆள் கடத்தல்), 394 (கொள்ளையடித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 201 (சாட்சியத்தை மறைத்தல்) பிரிவின் கீழ் 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 302 (கொலை செய்தல்) பிரிவின் கீழ் ஆயுட்கால சிறை தண்டனையும் மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதேபோல் தேக்கன், விஜய்விக்டர்ராஜ் ஆகியோரை கொலை செய்த வழக்கில் இந்திய தண்டனை சட்டம் 364, 394 ஆகிய பிரிவுகளின் கீழ் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், 201 பிரிவின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும், 302 பிரிவின் கீழ் இரண்டு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து, இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் சவரிமுத்து ஆஜராகி வாதாடினார்.

ஏற்கனவே 2 பேரை கொன்ற வழக்கில் சப்பாணிக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கிய நிலையில், தற்போது மேலும் 3 பேர் கொலை வழக்கில் அவருக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்