< Back
மாநில செய்திகள்
ஆணவக் கொலை செய்யப்பட்ட வாலிபரின் காதல் மனைவி தற்கொலை - கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவு
மாநில செய்திகள்

ஆணவக் கொலை செய்யப்பட்ட வாலிபரின் காதல் மனைவி தற்கொலை - கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவு

தினத்தந்தி
|
24 April 2024 11:01 AM IST

ஆணவக் கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரவீன் (வயது 25). மெக்கானிக். அவருடைய மனைவி ஷர்மிளா (22). பி.பி.ஏ.பட்டதாரி ஆவார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இருவரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தார்கள். காதலுக்கு ஷர்மிளாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காதலர்கள் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.

பிரவீன் வீட்டில் இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி இரவு பிரவீன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை ஆணவக்கொலை செய்ததாக ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ் உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், மாமனார், மாமியார் ஆகியோருடன் வசித்து வந்த ஷர்மிளா, பிரவீன் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்தே மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த 14-ந் தேதி ஷர்மிளா வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதைப்பார்த்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு 8 நாளாக சிகிச்சை பெற்று வந்த ஷர்மிளா நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷர்மிளா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் போலீசார் ஷர்மிளாவின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது ஷர்மிளாவின் டைரியை கைப்பற்றினர். இதில் ஷர்மிளா இறப்பதற்கு முன் தான் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்தது.

அதில், 'என்னால் என் கணவர் பிரவீன் இல்லாமல் இருக்க முடியல. நான் சாகப் போறேன். என் சாவிற்கு காரணம் தந்தை துரைக்குமார், தாய் சரளா, சகோதரர்கள் நரேஷ், தினேஷ் ஆகியோர் தான். பிரவீனை சாகடிச்சு என்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்க. எங்களை வாழ விடாம பண்ணிட்டாங்க. அவன் இல்லாத இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன் என உருக்கமாக அந்த கடிதத்தில் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சற்று நேரத்தில் ஷர்மிளாவின் உடலுக்கு உடற்கூராய்வு நடைபெற உள்ளது. இந்த பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஷர்மிளாவின் மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களிடம் பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்