ஆசிரியர் தம்பதி படுகொலை: விருதுநகர் எஸ்.பி. தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை
|அருப்புக்கோட்டையில் வீடு புகுந்து ஆசிரியர் தம்பதி படுகொலை செய்யப்பட்டனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு தப்பிய ஓடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் எம்.டி.ஆர். நகர் வடக்கு 2-வது தெருவை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் (வயது 72). இவருடைய மனைவி ஜோதிமணி (வயது 65). இருவரும் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.
இவர்களுடைய மகன் சதீஷ், சென்னை வேளச்சேரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அருப்புக்கோட்டையில் உள்ள வீட்டில் சங்கரபாண்டியன், அவருடைய மனைவி ஜோதிமணி ஆகியோர் மட்டும் வசித்து வந்தனர்.
இவர்களது வீட்டுக்கு நேற்று பிற்பகலில் உறவினர்கள் சிலர் வந்துள்ளனர். அப்போது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. சங்கரபாண்டியனும், ஜோதிமணியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்்தனர்.
உடனடியாக இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.
தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, விருதுநகர் சூப்பிரண்டு மனோகர், துணை சூப்பிரண்டு சகாய ஜோஸ் ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். சங்கரபாண்டியன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும், ஜோதிமணி கீழே விழுந்த நிலையிலும் பிணமாக கிடந்தனர்.
மேலும் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டு கிடந்தது. விருதுநகரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்..
கொலை செய்யப்பட்ட தம்பதியரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஆசிரியர் தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விருதுநகர் எஸ்.பி. தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.