< Back
மாநில செய்திகள்
ஆள்மாறாட்டத்தால் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை: முன்பே தெரிந்திருந்தும் தகவல் அளிக்காத போலீஸ்காரருக்கு தண்டனை போதுமானதல்ல- நீதிபதி கருத்து
மதுரை
மாநில செய்திகள்

ஆள்மாறாட்டத்தால் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை: "முன்பே தெரிந்திருந்தும் தகவல் அளிக்காத போலீஸ்காரருக்கு தண்டனை போதுமானதல்ல"- நீதிபதி கருத்து

தினத்தந்தி
|
1 Aug 2023 2:26 AM IST

ஆள்மாறாட்டத்தால் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இதுகுறித்த சதித்திட்டம் முன்பே தெரிந்திருந்தும் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்காத போலீஸ்காரருக்கான தண்டனை போதுமானதல்ல என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்தார்.


ஆள்மாறாட்டத்தால் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இதுகுறித்த சதித்திட்டம் முன்பே தெரிந்திருந்தும் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்காத போலீஸ்காரருக்கான தண்டனை போதுமானதல்ல என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் கொலை

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெள்ளத்துரை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் கடந்த 1995-ம் ஆண்டில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறேன். என் மனைவியின் தங்கை கணவர் சிவசுப்பிரமணியன் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், என் மனைவியின் தங்கை தனது பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள், சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியத்தை கொலை செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக ஏற்பாடு செய்த கும்பல், கடந்த 2010-ம் ஆண்டில் சிவசுப்பிரமணியத்துக்கு பதிலாக சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் என்பவரை ஆள்மாறாட்டத்தில் கொலை செய்தது. இந்த கொலை வழக்கில் போலீசார் என்னை விசாரித்தனர்.

என் மனைவியின் குடும்பத்தினர் திட்டமிட்டது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி, என்னை பதவி இறக்கம் செய்து உத்தரவிட்டனர். இதை ரத்து செய்து என்னை மீண்டும் அதே பதவியில் நீடிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

மனு தள்ளுபடி

இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் முத்துவிஜயன் ஆஜராகி, மனுதாரர் ஒரு போலீஸ்காரராக இருந்தும், கொலைச்சதி குறித்த தகவலை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்காததால், அநியாயமாக ஒரு சப்-இன்ஸ்பெக்டரின் உயிர் பறிக்கப்பட்டு உள்ளது. மனுதாரருக்கு விதித்த தண்டனையை ரத்து செய்ய தேவையில்லை என்று வாதாடினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சக காவல்துறை ஊழியரான சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல சதித்திட்டம் தீட்டியது குறித்து மனுதாரர் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து இருந்தால், அந்த சம்பவம் தடுக்கப்பட்டு இருக்கும். ஆனால் அவர் அதுபோல செய்யவில்லை. இதற்காக மனுதாரருக்கு அளிக்கப்பட்ட தண்டனை போதுமானதாக இந்த கோர்ட்டு கருதவில்லை. இருந்தாலும் உயர் அதிகாரிகளின் நடவடிக்கையில் தலையிட இந்த கோர்ட்டு விரும்பவில்லை என்பதால், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்