< Back
மாநில செய்திகள்
மைலோடு கொலை.. கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய ஐகோர்ட்டு அனுமதி மறுப்பு
மாநில செய்திகள்

மைலோடு கொலை.. கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய ஐகோர்ட்டு அனுமதி மறுப்பு

தினத்தந்தி
|
24 Jan 2024 1:51 PM IST

பொது கல்லறையில் உடலை அடக்கம் செய்வதில் ஆலய நிர்வாகத்துக்கு ஆட்சேபனை இல்லை என மனுதாரர் கூறியிருந்தார்.

மதுரை:

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆல்வின் ஜோஸ், ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

மைலோடு கிறிஸ்தவ ஆலய நிர்வாக பொருளாளராக உள்ளேன். இதன் உறுப்பினர்களில் ஒருவரான சேவியர் குமாருக்கும் பிற உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கிறிஸ்தவ ஆலயத்தில் சேவியர் குமார் கடந்த 20-ந் தேதி சிலரால் தாக்கப்பட்டார். இதில் அவர் இறந்து போனார்.

இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த பிரச்சினை இருதரப்பினருக்கு இடையே நடந்துள்ளது. கிறிஸ்தவ ஆலய நிர்வாகத்துக்கும், இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் இந்த விவகாரத்தை வைத்து கிராமத்தில் சிலர் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அத்துடன் ஆலய வளாகத்துக்குள் சேவியர் குமாரின் உடலை அடக்கம் செய்ய முயற்சிக்கின்றனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

பொது கல்லறையில் உடலை அடக்கம் செய்வதில் ஆலய நிர்வாகத்துக்கு ஆட்சேபனை இல்லை. அதேபோல, ஆலய வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய யாருக்கும் அனுமதி இல்லை. எனவே, இறந்து போனவரின் உடலை பொது கல்லறையில் அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு, நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இறந்து போனவரின் உடலை ஆலய வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ஆலயத்திற்கு அருகிலுள்ள கல்லறை தோட்டத்தில் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்