செல்போனுக்காக கொலை - ரெயில் நிலையங்களில் சிறப்பு குழு
|செல்போனுக்காக நடந்த கொலையை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை இந்திரா நகர் ரெயில் நிலையம் அருகே கொள்ளையர்கள் செல்போன் பறித்து சென்ற போது ரெயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த மாணவி ப்ரீத்தி சிகிச்சை பலனின்றி கடந்த 2-ம் தேதி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருவான்மியூர் ரெயில்வே போலீசார், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பழைய பதிவேடு குற்றவாளிகளின் பெயர்களையும் ஆய்வு செய்தனர்.
மிகவும் பிரம்மாண்டமாக காணப்படும் ரெயில் நிலையங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என்பது பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் ஒன்றாக உள்ளது.
பயணிகள் பாதுகாப்புக்காக போலீசார் போதிய அளவில் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை என்பதோடு சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் கூட பல ரெயில் நிலையங்களில் இல்லை என்பதே பயணிகள் முன் வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்தநிலையில், ரெயில் நிலையங்களில் 15 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ரெயில்வே போலீசாரால் நியமிக்கப்பட்ட இந்த சிறப்பு குழு காலை, மாலையில் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவித்துள்ளனர்.
ஓடும் ரெயிலில் கொள்ளையர்கள் செல்போனை பறிக்கும் போது இளம்பெண் தவறி விழுந்து, உயிரிழந்த சம்பவத்தையடுத்து மின்சார ரெயில்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.