< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  ரியல் எஸ்டேட் அதிபர் குத்திக்கொலை  காரில் வந்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் ரியல் எஸ்டேட் அதிபர் குத்திக்கொலை காரில் வந்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தினத்தந்தி
|
19 July 2022 3:56 PM GMT

நாமக்கல்லில் ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவருடன் காரில் வந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல்லில் ரியல் எஸ்டேட் அதிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவருடன் காரில் வந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ரியல் எஸ்டேட் அதிபர்

நாமக்கல் ஜெய்நகரை சேர்ந்தவர் குமரேசன் (வயது 48). ரியஸ் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது என கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம் இரவு சேந்தமங்கலம் சாலையில் உள்ள மதுக்கடை பாரில் நண்பர்களுடன் மது குடித்தார்.

பின்னர் நள்ளிரவு 12 மணி அளவில் குமரேசன் காரில் நண்பர்களுடன் வீடு திரும்பி கொண்டு இருந்தார். நாமக்கல்- திருச்சி சாலை பழைய நீதிமன்ற கட்டிடம் அருகே வந்தபோது காரில் வந்த நண்பர்களுக்கும், குமரேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதில் காரில் வந்தவர்களில் ஒருவர் குமரேசனின் கழுத்தில் கத்தியால் குத்தினார். இதையடுத்து காரில் வந்தவர்களும், குத்திய நபரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். குமரேசன் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

குத்திக்கொலை

உடனடியாக அங்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமரேசன் இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து அவருடைய மனைவி துர்கா நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காரில் வந்த நபர்கள் குமரேசனுக்கு நன்கு தெரிந்தவர்களாகவோ அல்லது நண்பர்களாகவோ இருக்க வேண்டும். அவர்கள் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் குமரேசனை குத்திக்கொலை செய்தார்களா? தொழில் போட்டி அல்லது பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு ஏதேனும் உள்ளதா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் திரண்ட குமரேசனின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த உறவினர்கள், உடலை பெற்றுச்சென்றனர்.

இந்த கொலை சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்