சிவகங்கை
ஓட, ஓட விரட்டி வாலிபர் கொலை
|வாலிபர், ஓட ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
சிவகங்கையில் கோவில் விழாவுக்கு வந்த வாலிபர், ஓட ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
15 வழக்குகள்
சிவகங்கை அருகே உள்ள வைரவன்பட்டியை சேர்ந்தவர் சிவா என்ற பரமசிவம் (வயது 30). இவர் சிவகங்கையில், தொண்டி ரோட்டில் ெரயில்வே மேம்பாலம் பகுதியில் வசித்து வந்தார்.
சிவா மீது கடந்த 2019-ம் ஆண்டில் சிவகங்கை நகரில் கோர்ட்டு அருகில் ராஜசேகரன் என்பவரை வெட்டிக்கொலை செய்த வழக்கு உள்பட 15 வழக்குகள் உள்ளன. இவர் சமீப காலமாக சிவகங்கையை விட்டு வெளியேறி, வேறு ஊரில் வசித்து வந்தார்.
வெட்டிக்கொலை
சிவகங்கையில் உள்ள ஒரு கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது. விழாவை காண்பதற்காக சிவா வந்திருந்தார்.
பின்னர் அவர், மதுரை ரோட்டில் காளவாசல் பகுதியில் உள்ள தன்னுடைய உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக இரவில் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற ஒரு கும்பல் அவரை ஓட ஓட விரட்டி முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்தது.
பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த சிவகங்கை போலீஸ் உதவி சூப்பிரண்டு பால்பாண்டி, இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று சிவாவின் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கூலிப்படையினர்
சிவா மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவரால் பாதிக்கப்பட்ட ஒரு கும்பல்தான் பழிவாங்கும் நோக்கில் அவரை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் அவரது முகத்தை அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைத்திருப்பதால் கூலிப்படையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையில் ஈடுபட்டவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருவதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தெரிவித்தார். இந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.