கிருஷ்ணகிரி
தி.மு.க. ஊழல் பட்டியலை அண்ணாமலை தனி நபராக வெளியிட்டாரா? பா.ஜ.க. தலைவராக வெளியிட்டாரா?கே.பி.முனுசாமி கேள்வி
|மத்தூர்:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தி.மு.க ஊழல் பட்டியலை தனிநபராக வெளியிட்டாரா? அல்லது பா.ஜ.க. தலைவராக வெளியிட்டாரா? என அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பிஉள்ளார்.
பேட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில்அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர் போன்றவற்றை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- தமிழக பா.ஜனதா தலைவர்அண்ணாமலை ஆட்சியில் இருக்கும் தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். அ.தி.மு.க.வை பொறுத்தவரை பா.ஜ.க. மாநில தலைவராக இருந்து இந்த ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டாரா? அல்லது தனிப்பட்ட முறையில் வெளியிட்டாரா? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
தனிப்பட்ட முறை
இதன்படி பா.ஜ.க. சார்பில் வெளியிட்டு இருந்தால் குறைந்தபட்சம் அவர்கள் ஆட்சி செய்கிற மாநிலத்தை தவிர பிற மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கத்தில் பா.ஜனதா தலைவர்கள் இதுபோன்று எதிர்கட்சி தலைவர்கள் மீது ஊழல் பட்டியலை வெளியிட இருக்கிறார்களா? என்பதை அறிய விரும்புகிறேன். அண்ணாமலை தனிப்பட்ட முறையில் இந்த ஊழல் பட்டியலை வெளியிட்டு இருந்தால் அதற்கு ஏற்றவாறு அ.தி.மு.க.வின் பதில் இருக்கும். அல்லது பா.ஜ.க. தலைவர் என்கிற முறையில் வெளியிட்டிருந்தால் அதற்கு ஏற்றவாறு எங்களின் பதில் இருக்கும்.
முக்கியத்துவம் தேவையில்லை
ஆணவ கொலைகளை தவிர்க்கப்பட வேண்டும். அண்ணாமலை கைகெடிகாரம் விவகாரம் ஒரு செய்தியே இல்லை. இதற்கெல்லாம் முக்கியத்துவம் தேவையில்லை. அண்ணாமலை மட்டும்தான் நாட்டுக்காக பிறந்தது போல் பேசி கொண்டிருக்கிறார். நாட்டுக்காக உழைத்தவர்கள், தியாகம் செய்தவர்கள் பல ஆயிரம் பேர் இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், தமிழ்ச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, மத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.