< Back
மாநில செய்திகள்
ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்கச்செய்ய வேண்டும்
திருப்பூர்
மாநில செய்திகள்

ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்கச்செய்ய வேண்டும்

தினத்தந்தி
|
28 Sep 2022 5:30 PM GMT

ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்கச்செய்ய வேண்டும்

திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.

தெருவிளக்கு பராமரிப்பு

திருப்பூர் மாமன்ற கூட்டம் நேற்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், உமாமகேஸ்வரி, கோவிந்தசாமி, கோவிந்தராஜ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

அ.தி.மு.க. எதிர்க்கட்சி குழு தலைவர் அன்பகம் திருப்பதி:-

குப்பை அள்ளும் மாநகராட்சி வானங்கள் சிறிய பழுது ஏற்பட்டாலும் சீரமைக்க காலதாமதம் ஆகிறது. அதுபோல் தெருவிளக்குகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வரும் ஊழியர்கள் குறைந்த அளவு உதிரிபாகங்களை கொண்டு வருவதால் சரி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. மண்டலம் வாரியாக வாகனங்களை சீரமைக்க பொறியாளரை நியமிக்க வேண்டும். தெருவிளக்கு உதிரி பாகங்களை மண்டலம் வாரியாக ஸ்டோர் அமைத்து இருப்பு வைத்து வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். 4-வது குடிநீர் திட்ட குழாய் பதிப்பு, பாதாள சாக்கடை திட்ட பணிகளை செய்வதில் மெத்தனப்போக்கு உள்ளது. காலஅளவீடு செய்து பணிகளை முடிக்க வேண்டும். தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போட வேண்டும். ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

தெருநாய்கள் தொந்தரவு

கவுன்சிலர் ராஜேந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு) :-

தெருநாய்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது. நடைபயிற்சிக்கு செல்பவர்கள் முதல் சிறியவர்கள் வரை தெருநாய்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நாய் கடித்தால் தடுப்பூசி போடுவதிலும் பல சிரமங்கள் உள்ளன. தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர் நாகராஜ் (ம.தி.மு.க.) :-

மாநகரில் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. சிறியவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கொசு மருந்து அடிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். கொசு மருந்து அடிக்க புதிய எந்திரங்களை வாங்க வேண்டும். மக்களிடம் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் தான் வரி வசூலிப்பு பணிகளுக்கு ஊழியர்கள் செல்ல முடியும்.

முறைகேடாக குடிநீர் இணைப்பு

கவுன்சிலர் பாத்திமா தஷ்ரீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்):-

42-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டு அதன் மூலம் மாநகராட்சிக்கு வரவேண்டிய வருவாய் தடுக்கப்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடுகளுக்குள் மழைநீர்

கவுன்சிலர் வேலம்மாள்:-

மும்மூர்த்திநகரில் மழைக்காலத்தில் 150 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. சாக்கடை கால்வாய் வசதியை அமைத்துக்கொடுக்க வேண்டும்.

செந்தூர் முத்து (தி.மு.க.) :-

அணைக்காடு, கே.என்.பி.காலனி வழியாக கனரக வாகனங்கள் செல்வதால் குடிநீர் குழாய் உடைந்து சேதமாகி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த வாகனங்கள் பிரதான சாலை வழியாக செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

குணசேகரன் (பா.ஜனதா) :-

குப்பை அள்ளும் வாகனங்களை எனது வார்டுக்கு தனியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதிகமாக குப்பை சேகரமாகிறது. மற்ற வார்டில் உள்ள வாகனத்தை எனது வார்டுக்கு அனுப்புகிறார்கள். குப்பையை அகற்றுவதில் சிரமம் ஏற்படுகிறது.

துப்புரவு பணியாளர்கள் சம்பளம்

மண்டல தலைவர் கோவிந்தசாமி (தி.முக.) :-

சத்துணவு மையங்களில் உள்ள ஆயாக்களுக்கு சரிவர சம்பளம் சென்று சேருவதில்லை. அதுபோல் துப்புரவு பணி செய்யும் கடைநிலை ஊழியர்களும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு உரிய சம்பளம் உரிய நேரத்தில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

ரவிச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு) :-

மாநகரில் பல பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை வசதியில்லை. வெயில் காலங்களில் மக்கள் சிரமப்படுகிறார்கள். அதை அமைத்துக்கொடுக்க வேண்டும்.

கண்ணப்பன் (அ.தி.மு.க.) :-

ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.708 சம்பளம் வழங்க திருப்பூர் மாவட்ட கலெக்டர் அரசாணை வெளியிட்டுள்ளார். ஆனால் மாநகராட்சியில் தூய்மைப்பணி ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் தூய்மைப்பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.327 மட்டுமே கொடுக்கிறார்கள். 30 நாட்களுக்கு பதிலாக 26 நாட்ளுக்கு மட்டுமே கணக்கிட்டு கொடுக்கிறார்கள். சம்பளம் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

ஆணையாளர் கிராந்திகுமார் பாடி:-

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்வதில் அரசின் கொள்கை முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஒவ்வொரு மாநகராட்சியிலும் சம்பள நிர்ணயம் செய்வதில் சில வேறுபாடுகள் உள்ளது. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வழிகாட்டுதலின் படி அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்