திருவள்ளூர்
பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்கக்கோரி - நகராட்சி துணைத்தலைவர், கவுன்சிலர்கள் போராட்டம்
|பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கக்கோரி அ.தி.மு.க.வை சேர்ந்த நகராட்சி துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் அலுவலக நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் 27 வார்டுகளில் 250-க்கும் மேற்பட்ட தெருக்களில் 10 ஆயிரத்துக்கும் மேலான குடியிருப்புகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கும் நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.56 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டபணிகள் கொண்டு வரப்பட்டு 51 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கியது.
இதனால் நகராட்சியில் உள்ள சாலைகளில் பள்ளம் எடுக்கப்பட்டு குழாய் இணைப்பு பணிகள் ஆமை வேகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.
பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு கட்ட போராட்டங்களை பொதுமக்கள் நடத்தினர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இது குறித்து தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு சென்றபோது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் மற்றும் அதிகாரிகள் பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் பணிகளை விரைவுபடுத்தாமல் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வரும் நிலையில் சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதிக்குளளாகி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அ.தி.மு.க.வை சேர்ந்த பொன்னேரி நகராட்சி மன்ற துணைத்தலைவர் விஜயகுமார் உள்பட 9 கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வார காலத்திற்குள் தற்காலிகமாக சாலை அமைக்கப்படும் எனவும் பாதாள சாக்கடை பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.