மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நகராட்சி கமிஷனர் - தாசில்தார் வாக்குவாதம்; ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார்
|வீட்டின் முன் மழைநீர் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டியதால் நகராட்சி கமிஷனர்-தாசில்தார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் செய்தனர்.
சென்னை திருவேற்காடு அடுத்த காடுவெட்டி, காயத்ரி நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவர், திருவள்ளூரில் நெடுஞ்சாலை துறை தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். இவர், குடியிருக்கும் பகுதியில் திருவேற்காடு நகராட்சி சார்பில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் செல்வம் வீட்டின் முன்பகுதியில் மழைநீர் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டதாக தெரிகிறது. பணி முடிந்து இரவில் வீட்டுக்கு வந்த தாசில்தார் செல்வம், வீட்டின் முன்பகுதியில் பள்ளம் தோண்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் காரை வீட்டுக்குள் ஏற்றிவிட முடியாத நிலை ஏற்பட்டது.
உடனடியாக இது குறித்து திருவேற்காடு நகராட்சி கமிஷனர் ஜகாங்கீர் பாஷாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தனது வீட்டின் முன்பகுதியில் பள்ளம் தோண்டி இருப்பது குறித்து தட்டிக்கேட்டார். அதற்கு நகராட்சி கமிஷனர், நேரில் வந்து பேசும்படி கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த தாசில்தார் செல்வம், திருவேற்காடு நகராட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று கேட்டார். அப்போது நகராட்சி கமிஷனர் ஜகாங்கீர் பாஷாவுக்கும், தாசில்தார் செல்வத்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், ஒருவரை ஒருவர் மாறி, மாறி கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து நகராட்சி கமிஷனர் ஜகாங்கீர்பாஷா, திருவேற்காடு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அரசு பணியை செய்யவிடாமல் தடுப்பதாக தாசில்தார் செல்வம் மீது புகார் அளித்தார்.
இதையறிந்த தாசில்தார் செல்வம், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தனது வீட்டின் முன்பகுதியில் நகராட்சி அதிகாரிகள் தோண்டிவிட்டதாகவும், இதனை தட்டிக்கேட்டபோது அவதூறாக பேசியதாகவும் நகராட்சி கமிஷனர் மீது திருவேற்காடு போலீசில் புகார் அளித்தார்.
நகராட்சி கமிஷனர்-தாசில்தார் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி அளித்த புகார்களின் பேரில் திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.