ஊட்டியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட பிரபல தனியார் உணவகத்திற்கு சீல் - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
|ஊட்டியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட தனியார் வணிக வளாகத்தில் இயங்கி வந்த பிரபல உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச் சூழல் பாதிப்பை தடுக்கவும், எதிர்காலத்தில் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையிலும் கட்டிடங்கள் கட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக, 1993-ம் ஆண்டு மாஸ்டர் பிளான் சட்டப்படி 21 அடிக்கு மேல் கட்டிடங்கள் கட்டவும், 30 டிகிரி சரிவான பகுதிகளில் கட்டிடங்கள் கட்டவும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 1999-ம் ஆண்டு கேசினோ சந்திப்பு பகுதியில் விதிமுறைகளை மீறி 4 தளங்களுடன் தனியார் வணிக வளாகம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தினர் அந்தக் கட்டிடத்திற்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்தனர்.
வழிபாட்டுத்தலம்
ஆனால் தனியார் வணிக வளாகத்தினர் இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிந்து கடந்த மாதம் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் விதிமுறை மீறி கட்டப்பட்ட வணிக வளாக கட்டிடத்தை இடிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்க நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்தனர். அப்போது 4-வது தளத்தில் வழிபாட்டு தளம் இருந்ததால் பேச்சுவார்த்தை நடத்தி சீல் வைக்கப்படவில்லை. தரைத்தளத்தில் இருந்த கடைகளுக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டது.
நிதி நிறுவனத்திற்கு சீல்
இந்த நிலையில் மீதமுள்ள கடைகளுக்கு சீல் வைக்க நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் உத்தரவின் பேரில் நகர அமைப்பு அதிகாரி ஜெயவேல், நகரமைப்பு திட்ட இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையிலான குழுவினர் அந்த அந்த வணிக வளாகத்திற்கு வந்தனர்.
அங்கு முதல் தளத்தில் உள்ள பிரபல உணவகத்திற்கு இன்று காலை சீல் வைக்கப்பட்டது. இதேபோல் அந்த வணிக வளாகத்தில் இருந்த 14 அலுவலகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. அங்கு இருந்த தனியார் நிதி நிறுவனம் மட்டும் அலுவலகத்தை காலி செய்ய அடுத்த மாதம் வரை அவகாசம் வாங்கி இருப்பதால் நிதி நிறுவனத்திற்கு சீல் வைக்கப்படவில்லை.
இதே போல் இன்று ஊட்டியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட பல்வேறு கடைகள் மற்றும் கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.