நாமக்கல்
மலைக்கோவில் குன்றின் மீது அமைந்துள்ள முனியப்பன் கோவில்
|நாமக்கல் நகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட மலைக்குன்றின் மீது அமைந்துள்ள பழமையான முனியப்பன் கோவில் திருப்பணிகள் நடைபெறுமா? என பக்தர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
24-வது வார்டு
நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 24-வது வார்டில் சந்தைபேட்டைபுதூர் வடக்கு தெரு, ஜெட்டிக்குளத்தெரு, முனியப்பன் கோவில் தெரு, பஜனைமட தெரு, தாந்தோணி தெரு, செல்லாண்டியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகள் அடங்கி உள்ளன. இந்த வார்டில் 2 அங்கன்வாடி மையங்களும், ஒரு ரேஷன்கடையும் செயல்பட்டு வருகின்றன. நாமக்கல் உழவர்சந்தை, மாவட்ட நூலகம் இந்த வார்டில் தான் உள்ளது.
இந்த வார்டு ஏற்கனவே உள்ள பழைய நகராட்சி பகுதியை சேர்ந்தது ஆகும். இங்கு பாதாள சாக்கடை திட்டம் அமலில் இருப்பதால், கழிவுநீர் பிரச்சினை பெரிய அளவில் இல்லை. இருப்பினும் சிலர் இன்னும் இந்த திட்டத்தில் இணையாமல் வாய்க்காலில் கழிவுநீரை விட்டு வருவதால் சில இடங்களில் கழிவுநீர் பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த வார்டில் 1,313 ஆண்கள், 1,495 பெண்கள், 2 இதரர் என மொத்தம் 2,810 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நந்தினிதேவி வெற்றிபெற்றார். நகராட்சியின் பிற வார்டுகளை போல இந்த வார்டிலும் தெருநாய்கள் தொல்லை இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். சாலை வசதியை மேம்படுத்த வேண்டும். அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முனியப்பன் கோவில் புதுப்பிக்கப்படுமா?
இது குறித்து சந்தைபேட்டைபுதூர் வடக்கு தெருவை சேர்ந்த பழனிசாமி கூறியதாவது:-
எங்களது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான முனியப்பன் கோவில் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. முனியப்பன் கோவில் கோட்டை சாலையை ஒட்டி உள்ள மலைக்குன்றின் மீது அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் இக்கோவில் நாளுக்குநாள் சிதிலம் அடைந்து வருகிறது. எனவே இந்த கோவிலையும், ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலையையும் புதுப்பித்து திருப்பணி மேற்கொள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் வார்டுக்கு உட்பட்ட பல சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன. எனவே முதல்கட்டமாக பேட்ஜ் ஒர்க் செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் ஜெட்டிக்குளத்தெருவில் 3-வது சந்து பகுதியில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே அந்த சாலையை உடனடியாக புதுப்பித்து தர வேண்டும்.
சமுதாயக்கூடம்
ஜெட்டிக்குளம் தெருவை சேர்ந்த கீர்த்திகா:-
எங்கள் வார்டில் உள்ள அங்கன்வாடிக்கு சொந்த கட்டிடம் இல்லை. எனவே ஜெட்டிக்குள தெருவில் அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய்யேரிக்கரை ரேஷன்கடை அருகில் விடுபட்ட மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
இதேபோல் கழிவுநீர் வாய்க்கால் செல்லும் பாலத்தில் குழாய் அமைக்கப்பட்டு இருப்பதால், அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே குழாயை அகற்றிவிட்டு, உயரமாக பாலம் அமைக்க வேண்டும். வார்டு முழுவதும் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். செல்லாண்டியம்மன் கோவில் அருகில் சமுதாயக்கூடம் அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.