புதுக்கோட்டை
செடிகளில் பறிக்காமல் விடப்படும் வெண்டைக்காய்கள்
|வடகாடு பகுதியில் விலை வீழ்ச்சியால் செடிகளில் பறிக்காமல் விடப்படும் வெண்டைக்காய்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விலை வீழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆழ்குழாய் கிணற்று பாசனம் மூலமாக, வெண்டைக்காய் சாகுபடி பணிகளில் அதிக அளவில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களை பயன்படுத்தி வெண்டைக்காய்களை செடிகளில் இருந்து பறித்து அந்தந்த பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகளில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாகவே வெண்டைக்காய் விலை வீழ்ச்சியால் கிலோ ரூ.10-க்கும் ரூ.15- க்கும் விற்பனை ஆவதால் கூலிக்கு கூட கட்டுப்படி ஆகாத காரணத்தால் பல்வேறு இடங்களில் வெண்டைக்காய் பயிரிட்ட விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
செடிகளில் பறிக்காமல்...
இதனால் வெண்டைக்காய்களை பறிக்காமல் வெண்டை செடிகளிலேயே விட்டு விடுவதால் வெண்டைக்காய்கள் முற்றிய நிலையில் செடிகளில் வீணாகி வருவதாகவும் கூறப்படுகிறது. ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லமை வாய்ந்த வழவழப்பு தன்மை உடைய வெண்டைக்காய்கள் விலை வீழ்ச்சி காரணமாக இப்படி யாருக்கும் உதவாது வீணாகி வருவதாக இப்பகுதி விவசாயிகள் வருத்தப்பட்டு வருகின்றனர்.