< Back
மாநில செய்திகள்
பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
வேலூர்
மாநில செய்திகள்

பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
24 Jun 2023 5:32 PM GMT

பீஞ்சமந்தை ஊராட்சியில் பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அணைக்கட்டு

பீஞ்சமந்தை ஊராட்சியில் பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சிறப்பு மருத்துவ முகாம்

ஒடுகத்தூர் அருகே பீஞ்சமந்தை மலை கிராமத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை நடத்தும் பன்னோக்கு சிறப்பு மருத்துவம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் அரசினர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடந்தது.

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இணை இயக்குனர் சதீஷ் ராகவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பானுமதி ஆகியோர் தலைமை தாங்கினர். திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார் வரவேற்றார்.

முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தார்சாலை அமைக்கும் பணி

நந்தகுமார் எம்.எல்.ஏ. பேசுகையில், மலைவாழ் மக்களுக்கு அனைத்து சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்னும், 2 மாதங்களில் பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு தார் சாலைஅமைக்கும் பணிகள் முடிந்து விடும், அதனை தொடர்ந்து ஜார்தான்கொல்லை, பலாம்பட்டு உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு தார் சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றார்.

கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில், மலைவாழ் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரவே அரசு அதிகாரிகள் உள்ளனர்.

நகர்புறத்தில் என்னென்ன அடிப்படை வசதிகள் உள்ளதோ அது அனைத்தும் மலை கிராமங்களிலும் செய்து தரப்படும். தற்போது போடப்பட்டு வரும் தார் சாலை உங்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ, இ.சி.ஜி., மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, தொழுநோய் கண்டறியும் பரிசோதனை, புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் தாசில்தார் வேண்டா, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சுதாகரன், சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் ரேகா ஆனந்தன், வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து பீஞ்சமந்தையில் நடந்து வரும் தார் சாலை அமைக்கும் பணியினை கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்