< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் முதலீடுகளை குவிக்கும் நிறுவனங்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் முதலீடுகளை குவிக்கும் நிறுவனங்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தினத்தந்தி
|
7 Jan 2024 12:07 PM IST

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்குவது, முதலீடு செய்தல், தொழில் செயல்பாடுகளை விரிவுபடுத்துதல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும், தொழிலை விரிவுபடுத்தவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசின் செமி கண்டெக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனங்கள் விவரங்கள் வருமாறு:-

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கிருஷ்ணகிரியில் உள்ள தங்கள் எலக்ட்ரானிக் உற்பத்தி ஆலையை 12 ஆயிரத்து 82 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்கிறது. இதன் மூலம் 40 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் கூடுதலாக 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருந்த நிலையில் தற்போது கூடுதலாக 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

காஞ்சிபுரத்தில் ஐசிஇ மற்றும் மின்சார கார்கள், பேட்டரி தயாரிக்க ஹூண்டாய் நிறுவனம் 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

அமெரிக்காவின் பஸ்ட் சோலார் நிறுவனம் 56 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

கோத்ரேஜ் நிறுவனம் 515 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

பெகட்ரான் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செங்கல்பட்டில் உள்ள தங்கள் உற்பத்தி ஆலையை 1 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விரிவாக்கம் செய்கிறது. இதன் மூலம் 8 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் உற்பத்தி ஆலை அமைக்க உள்ளது. இதன் மூலம் 3 ஆயிரத்து 500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டிலேயே உற்பத்தி ஆலையின் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள தனது உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்யும் விதமாக ஜேஎஸ்டபுள்யூ நிறுவனம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் டிவிஎஸ் நிறுவனம் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இதன் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

குவால்காம் நிறுவனம் தமிழ்நாட்டில் 177 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 1 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேலும் செய்திகள்