தேனி
தேங்கி கிடக்கும் குப்பைகளால் மாசடையும் முல்லைப்பெரியாறு
|வீரபாண்டியில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் முல்லைப்பெரியாறு மாசடைந்து வருகிறது.
தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்திபெற்ற கவுமாரியம்மன் கோவில் மற்றும் கன்னீஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இந்த கோவில்களை சுற்றி 30-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. இதனால் இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக முல்லைப்பெரியாற்றின் கரையில் கன்னீஸ்வரமுடையார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் பரிகாரம் செய்வதற்காக கொண்டுவரும் பொருட்கள், பூமாலைகளை ஆற்றில் கொட்டி செல்கின்றனர். மேலும் கோவிலில் திருமணம் வைப்பவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டுவரும் உணவுப்பொருட்களை சாப்பிட்டு விட்டு இலைகள், பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை முல்லைப்பெரியாற்றில் போட்டுவிட்டு செல்கின்றனர். அங்கு குப்பை தொட்டிகள் இல்லாததே இதற்கு காரணம் என்று பொதுமக்கள் புகார் தெரிவிக் கின்றனர்.
இவ்வாறு கொட்டப்படும் குப்பை கழிவுகள் ஆற்றில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் ஆற்றில் குப்பைகள் தேங்கியுள்ளதால் தண்ணீரும் மாசடைந்து வருகிறது. இதுதவிர ஆற்றின் கரையோரமும், கோவில் அருகிலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி, பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை முகம்சுளிக்க வைக்கிறது. எனவே ஆற்றின் கரையில் குப்பை தொட்டிகள் வைத்து பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.