முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
|முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பலமுறை முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியில் இந்த முறை பின்பற்றப்படவில்லை. தற்போது, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீர்பிடிப்புப்பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டியது.
உடனே, கேரள முதல்-மந்திரி, அணைக்கு நீர் வரத்தை விட அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசும், தமிழக விவசாயிகளை கலந்து ஆலோசிக்காமல், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 534 கன அடி நீரை கேரள பகுதிக்கு திறந்து விட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
முல்லைப்பெரியாறு அணையினால் பயனடைந்து வரும் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், முல்லைப்பெரியாறு அணையில் 142 வரை நீரை தேக்காததற்கு 'ரூல் கர்வ்' என்ற விதி தான் காரணம் என்று கூறுகின்றனர். இந்த 'ரூல் கர்வ்' விதிக்கு விவசாய சங்கங்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
இந்த 'ரூல் கர்வ்' விதி தான் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு காரணமாக பேசப்படுகிறது. எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, 'ரூல் கர்வ்' விதி குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கவும், அதனை ரத்து செய்யவும், 'ரூல் கர்வ்' அட்டவணையை அனைவரின் பார்வைக்கு வெளியிடவும், தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய 'ரூல் கர்வ்' குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனை எதிர்த்து அ.தி.மு.க.வின் சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.