கள்ளக்குறிச்சி
செம்பியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்
|சங்கராபுரம் அருகே 18 ஆண்டுகளுக்கு பிறகு செம்பியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தில் செம்பியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தேர்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் சக்தி அழைத்தல் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நெடுமானூர் பெரிய ஏரியில் இறங்கி சக்திகரகம் ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறது. தொடர்ந்து நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி அங்குள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து மேள, தாளம் இசைக்க பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர். பின்னர் இந்த முளைப்பாரிகளை பெரிய ஏரிக்கு கொண்டு சென்று கரைத்தனர். தொடர்ந்து செம்பியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று(சனிக்கிழமை) நடைபெற உள்ளது.