சிவகங்கை
முறையூர் மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழா
|முறையூர் மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது
சிங்கம்புணரி அருகே முறையூரில் பிரசித்தி பெற்ற சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பிக்கும் பணி மற்றும் ராஜ கோபுரங்கள், மண்டப கல், மண்டபம் போன்றவை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. கோவிலின் கிழக்கே 5 நிலை ராஜகோபுரம், மற்றும் தெற்கு மூன்று நிலை ராஜகோபுரங்கள் அமைக்கப்பட்டு, கிழக்கு பகுதியில் கல் மண்டபம், வடக்கு பகுதியில் கல் மண்டபம், அஷ்ட லிங்க கல் மண்டபம், பைரவர் போன்ற விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்றது.
5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட திருப்பணிக்காக தேவஸ்தானம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்போடு ஊராட்சி தலைவர் சுரேஷ் சொந்த நிதியில் கூடுதல் பங்களிப்போடு குறிப்பாக கிழக்கு பகுதியில் உள்ள கல் மண்டபம் அமைக்க நிதி வழங்கப்பட்டு திருப்பணிகள் முடிவு பெற்றுள்ளன. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு கோவில் முன்பு யாகசாலை அமைக்கும் பணிக்காக நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. முன்னதாக சுரேஷ் குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றன. தொடர்ந்து கோவில் கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் மற்றும் கவுரவ கண்காணிப்பாளர் மாணிக்கம் ஆகியோர் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, ஊராட்சி தலைவர் சுரேஷ், கிராம அம்பலகாரர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் முகூர்த்தக்கால் நடும்பணி தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் சாமியாடி சொக்கநாதன், கரு கோபாலன், பொன் குணசேகரன், மற்றும் கிராமத்து சாமியாடிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் முறையூர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.