மதுரை
முகூர்த்த தினம்- பனிப்பொழிவால் வரத்து குறைவு: மதுரை மல்லிகை கிலோ ரூ.4,500-க்கு விற்பனை -தேவைக்கு ஏற்ப பூக்கள் வாங்க முடியாமல் பெண்கள் ஏமாற்றம்
|மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.4,500-க்கு விற்பனையானது. இதனால் ேதவைக்கு ஏற்ப பூக்கள் வாங்க முடியாமல் பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.4,500-க்கு விற்பனையானது. இதனால் ேதவைக்கு ஏற்ப பூக்கள் வாங்க முடியாமல் பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மதுரை மல்லிகை
மதுரை மல்லிகைப்பூவிற்கு எப்போதும் தனி மவுசு உண்டு. திருவிழா, சுபமுகூர்த்த தினங்களில் அதனுடைய விலை உச்சத்தை தொடும். மதுரை, விருதுநகர், திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு டன் கணக்கில் மல்லிகை உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்காக வருகின்றன. விற்பனைக்கு போக, மீதமுள்ள பூக்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதற்கிடையே, பனிபொழிவு காரணமாக மல்லிகைப்பூக்களின் விலை ரூ.2 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தது. இந்த நிலையில், இன்றும், நாளையும் முகூர்த்த தினமாக இருக்கிறது. இதனால், நேற்று காலை நேரத்தில் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் மல்லிகைப்பூவானது ஒரு கிலோ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3500 வரை விற்பனையானது. நேரம் செல்ல, செல்ல பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. இதனால் பூக்களின் விலை உயரத்தொடங்கி, மதிய நேரத்தில் மல்லிகைப்பூவின் விலையானது ஒரு கிலோ ரூ.4500-க்கும் அதிகமாக விற்பனையானது. இதுபோல், பிச்சி ரூ.1800, முல்லை ரூ.1900, சம்பங்கி ரூ.400, செண்டுமல்லி ரூ.100, பட்டன்ரோஸ் ரூ.250 என இருந்தது. மற்ற பூக்களின் விலையும் கணிசமாக இருந்தது. இருப்பினும் தேவையின் காரணமாக, மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பூக்களை விரும்பி வாங்கி சென்றனர்.
இதற்கிடையே, மதுரையை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், மதுரை மல்லிகை பூவை ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தனர்.
கடைசி முகூர்த்த தினம்
இதுகுறித்து பூவியாபாரிகள் கூறுகையில், 2022-ம் வருடத்தின் வளர்பிறை கடைசி முகூர்த்த நாள் என்பதால் இந்த விலை ஏற்றம் இருந்தது. மதுரையை சுற்றி உள்ள பகுதிகளில் காலை நேர பனிபொழிவு காரணமாக மகசூல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, முகூர்த்த தினத்தையொட்டி மேலும் விலை ஏற்றம் கண்டுள்ளது. வரும் காலங்களிலும் அதாவது, கார்த்திகை தீப திருநாள் பண்டிகை முடியும் வரை பூக்களின் விலை இன்னும் ஏற்றம் அடையும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
தலை நிறைய வைக்க முடியவில்லை
மதுரை அனு அப்சரா: மல்லிகைப்பூவை முழம், முழமாக தலைநிறைய வைத்து விட்டு திருவிழாக்களுக்கு செல்வோம். ஆனால், தற்போது கிலோ ரூ.4500 வரை விற்பனையாகிறது. இதனால், சிறிய அளவில் கூட தலையில் பூக்கள் வைக்க முடியாத நிலை உள்ளது. அந்த அளவிற்கு பூக்களுக்கு கடும் தட்டுப்பாடும், விலை ஏற்றமும் ஏற்பட்டு விட்டது. இதனால் மல்லிகை பூவை மதுரையில் இருந்தும் நாங்கள் தலை நிறைய வைக்கமுடியவில்லை. உறவினர்களுக்கும் கொண்டு செல்ல முடியவில்லை.
அதிக பணம் செலவாகும்
புதுப்பெண் காயத்திரி: இன்று எனக்கு திருமணம் நடக்க இருக்கிறது. மதுரை என்றாலே மல்லிகை தான். மல்லிகை வைத்தால் தான் மனம் நிறையும். இதற்கிடையே, என்னுடைய திருமணத்திற்கு வெளியூரில் இருந்து வரும் என்னுடைய தோழிகள், உறவினர்களுக்கு கிலோ கணக்கில் மல்லிகைப்பூ கொடுக்கலாம் என நினைத்திருந்தோம். ஆனால் விலையை கேட்டால், அதனை யாருக்கும் கொடுத்து விட முடியாது என தோன்றுகிறது. மல்லிகைப்பூ வாங்குவதற்கே ஆயிரக்கணக்கில் பணம் ஒதுக்க வேண்டியதிருக்கிறது.
விவசாயிகளுக்கு பயன் இல்லை
திருப்பரங்குன்றம் கொம்பாடியை சேர்ந்த முருகேஸ்வரி: பனிபொழிவு, மழை பொழிவு, தரை ஈரப்பதம் இருப்பதால் செடிகள் வளராது. பூக்களும் அதிகமாக பூக்காது. இந்த சமயத்தில் மல்லிகை விவசாயமானது விவசாயிகளுக்கு பெரிய அளவில் கைகொடுப்பதில்லை. பனிபொழிவால் தோட்டங்களில் இருந்து மல்லிகைப்பூ வரத்து குறைவாகிவிடும். அதனால் மல்லிகைப்பூ விலை உயரும்.
விவசாயி சுந்தர்ராஜன்: தை, மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் வெயில் காலத்தில் பூக்கள் விளைச்சல் இருக்கும். விலை இருக்காது. தற்போது பனிக்காலம் என்பதால் பூக்கள் விளைச்சல் இல்லை. செடி, காம்புகளில் நோய் தாக்கி உள்ளது. அதை எவ்வளவு மருந்து அடித்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. மல்லிகைப்பூவின் விலை ஒரு கிலோ ரூ4,500-க்கு விற்றாலும், விவசாயிகளின் வாழ்வு மணக்கவில்லை.
திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் பூ வியாபாரி ஜெயக்குமார்:-
முகூர்த்தம், கார்த்திகை மாதமாக இருப்பதால் மல்லிகைப்பூவின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. என்னை போன்ற சிறுவியாபாரிகள் கூடுதல் விலைக்கு வாங்கி வீடுகளில் விற்பனை செய்ய முடியவில்லை. எனவே வியாபாரம் பெரிய அளவில் பாதிப்பு அடைந்து உள்ளது.
கவாத்து அவசியம்
திருப்பரங்குன்றம் வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பிரபா:-
மல்லிகைப்பூ மகசூல் டிசம்பர் முதல் மார்ச் மாதத்தில் குறைந்து காணப்படுவதால் அதன் விலை அதிகரித்து இருக்கும்.இதனை தடுக்க செப்டம்பர் மாதத்தில் கவாத்து செய்து சைக்கோ செல், ஹிமிக் அமிலம் 2 சதவீதம், 15 நாள் இடைவெளியிலும் மற்றும் தயோ யூரியா 1 சதவீதம் போன்ற வேதியியல் மருந்துகளை தெளிப்பதன் மூலம் டிசம்பர் முதல் மார்ச் மாதத்தில் பூக்கள் மகசூல் அதிகரிக்கும்.
வரத்து குறைவு
உசிலம்பட்டி கட்டளைமாயன்பட்டி விவசாயி தமிழ்செல்வன்:-
மல்லிகை பூ, சம்பங்கி உள்பட பூக்கள் பனிப்பொழிவின் காரணமாகவும் சாரல் மழையின் காரணமாகவும் பூப்பதில்லை. இந்த பூக்கள் ஜனவரி கடைசி முதல் பிப்ரவரி மாதங்கள் தான் பூக்க தொடங்கும். தற்போது வரத்து குறைந்ததினால் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு எந்த லாபமும் இல்லை.
காரியாபட்டி கழுவனச்சேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி சடையன்:- காரியாபட்டி தாலுகா தோப்பூர், கழுவனசேரி, கே.செவல்பட்டி, காரியாபட்டி, குரண்டி, அரசகுளம், மாங்குளம், சீகனேந்தல் ஆகிய கிராமங்களில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் மற்றும் அதிக பனிப்பொழிவு இருப்பதால் மல்லிகைப்பூ விளைச்சல் குறைந்துள்ளது. தற்போது மல்லிகை பூவின் விலை ரூ.4 ஆயிரத்திற்கு மேல் விற்பனையாகிறது. இந்தநிலையில் விளைச்சல் குைறந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.