< Back
மாநில செய்திகள்
முதுகுளத்தூர் பேரூராட்சி கூட்டம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

முதுகுளத்தூர் பேரூராட்சி கூட்டம்

தினத்தந்தி
|
2 April 2023 12:15 AM IST

முதுகுளத்தூர் பேரூராட்சி வளாகத்தில் கவுன்சிலர் குழு கூட்டம் நடைபெற்றது.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் பேரூராட்சி வளாகத்தில் கவுன்சிலர் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ஷாஜகான் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மாலதி, துணைத்தலைவர் வயன பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி பணியாளர் ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார்.

இதில் 7-வது வார்டு கவுன்சிலர் மோகன்தாஸ் கூறும் போது, பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் முறையாக வரி செலுத்தாமல் தண்ணீர் இணைப்புகள் வழங்கி உள்ளதாக புகார் தெரிவித்தார். இதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். பேரூராட்சி தலைவர் ஷாஜகான் கூறுகையில் வரி செலுத்தாமல் தண்ணீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

8-வது வார்டு கவுன்சிலர் நாகூர் மீரா பேசுகையில், முதுகுளத்தூர் நகர் பகுதியில் போக்குவரத்து இடையூறை தடுக்க ரூ.7 கோடியில் சாலை விரிவாக்கம் செய்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.

10-வது வார்டு கவுன்சிலர் சேகர் கூறுகையில் சந்தை கடை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகள் அனைத்துக்கும் டெண்டர் விட வேண்டும் என கூறினார். மேலும் இவை அனைத்தும் குறைவான வாடகையில் இயங்கி வருவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றார். இதற்கு தலைவர் ஷாஜகான் கூறுகையில் இந்தக் கடைகள் அனைத்துக்கும் கால அவகாசம் உள்ளது. இவை அனைத்தும் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. வழக்குகள் முடிவுக்கு வந்தவுடன் முறையாக டெண்டர் விடப்படும் என கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்