செங்கல்பட்டு
பழங்குடியினர் நலக்குழுவை சேர்ந்த எம்.பி.க்கள் மாமல்லபுரம் வருகை
|நாடாளுமன்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு எம்.பி.க்கள் 15 பேர் குழு தலைவர் பிரேம்ஜிபாய் சோலங்கி தலைமையில் மாமல்லபுரம் வந்தனர். அவர்கள் அங்குள்ள கடற்கரை கோவிலை மின்விளக்கு வெளிச்சத்தில் சுற்றி பார்த்து ரசித்தனர்.
எம்.பி.க்கள் வருகை
நாடாளுமன்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு எம்.பி.க்கள் 15 பேர் நேற்று அந்த குழு தலைவர் பிரேம்ஜிபாய் சோலங்கி தலைமையில் மாமல்லபுரம் வந்தனர். எம்.பி.க்கள் குழுவினரை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ் உள்ளிட்ட சுற்றுலாத்துறை, தொல்லியல் துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோவிலின் எழில்மிகு தோற்றத்தை ஜொலிக்கும் மின் விளக்கு வெளிச்சத்தில் கலை நயத்துடன் கண்டுரசித்தனர்.
சிலைகளை பார்வையிட்டனர்
கடற்கரை கோவிலின் இரு கருவரைகளில் வீற்றிருக்கும் சிவன், விஷ்ணு சன்னதிகளை பார்வையிட்டனர். அங்கு முகப்பு வாயிலில் உள்ள நந்தி சிலைகளையும் அவர் பார்வையிட்டனர். அப்போது உடன் வந்த மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டிகள் எம்.கே.சீனிவாசன், யுவுராஜ், மதன் உள்ளிட்ட சுற்றுலா வழிகாட்டிகள் கடற்கரை கோவில் உருவாக்கப்பட்டத்தின் பின்னணி, கடல் ஓரத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் அவை எப்படி கட்டப்பட்டது. கடல் உப்பு காற்று அரிக்காத வகையில் எப்படி கோவில் பழமை மாறாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்ற தகவல்களை விரிவாக விளக்கி கூறினர். அவர்களிடம் எம்.பி.க்கள் குழுவினர் கடற்கரை கோவிலின் அரிய தகவல்களை பற்றி ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டார்.