மதுரை
எம்.பி.பி.எஸ். படிக்க இந்திய மாணவர்களுக்கு ரஷியாவில் 5 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு
|எம்.பி.பி.எஸ். படிக்க இந்திய மாணவர்களுக்கு ரஷியாவில் 5 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரஷிய தூதரகத்தில் செயல்பட்டு வரும் இந்திய கலாசார பிரிவு சார்பில், அங்குள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இது குறித்து வோல்கோகிராட் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் நவ்மோவா விக்டோரியா மற்றும் கசான் மாநில மருத்துவ பல்கலைக்கழக முதன்மை ஆசிரியர் ஹைபுல்லினா அய்ஸ்லு மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- வெளிநாட்டு மருத்துவ பல்கலைக்கழகங்கள் வழங்கும் எம்.பி.பி.எஸ். படிப்புகளை அங்கீகரிப்பதற்காக, இந்திய தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள சமீபத்திய நிபந்தனைகளை ரஷியா முழுமையாக பூர்த்தி செய்துள்ளது.
ரஷிய பல்கலைக்கழகங்களில் படித்து முடிக்கும் இந்திய மாணவர்கள் தங்கள் சொந்த நாட்டில் மருத்துவம் பார்ப்பதற்கு, அவர்கள் பெறும் பட்டங்களுக்கு மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் கட்டாயமாகும். வெளிநாடுகளில் வழங்கப்படும் மருத்துவப்பட்டம், இந்தியாவில் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளும் உரிமம் பெற தகுதியுடையதாக இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் ரஷ்ய பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே பின்பற்றி வருகின்றன.
எனவே, இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு ரஷியாவை தேர்வு செய்கின்றனர். இதற்காக 5 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு ரஷிய கல்வி நிறுவனங்களில் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான படிப்புகளில் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்கள் ரஷியாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ரஷியா கல்வி நிறுவனங்களில் சேர சி.இ.டி. மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ். போன்ற மொழித்தேர்வுகள் இல்லை.
அத்துடன் மாணவர்களின் வசதிக்காக ரஷ்ய கல்வி நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி வருகிற 20-ந் தேதி மதுரையில் நடக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அப்போது, மாணவர் சேர்க்கை பிரிவு ரவிச்சந்திரன் உடன் இருந்தார்.