< Back
மாநில செய்திகள்
துணிவு, வாரிசு படங்கள் நாளை வெளியீடு:ரசிகர் மன்றங்களுக்கு போலீஸ் கட்டுப்பாடு
நாமக்கல்
மாநில செய்திகள்

துணிவு, வாரிசு படங்கள் நாளை வெளியீடு:ரசிகர் மன்றங்களுக்கு போலீஸ் கட்டுப்பாடு

தினத்தந்தி
|
10 Jan 2023 12:15 AM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படமும், நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் வெளியாகின்றன. இதற்காக கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். நாமக்கல் நகரில் 2 தியேட்டர்களில் திரைப்படங்கள் வெளியாகின்றன. திரைப்படம் வெளியான பின்னர் அஜித், விஜய் ரசிகர் மன்றத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு அதனால் சினிமா தியேட்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் நகரில் 2 தியேட்டர்களில் துணிவு, வாரிசு திரைப்படங்கள் வெளியாகிறது. முதல் நாளில் 2 படங்களுக்கும் ரசிகர்கள் அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் பொது இடங்களிலும், தியேட்டர் வளாகத்திலும், மேளம் அடித்துக்கொண்டோ, ஊர்வலமாக சென்றோ பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்யக்கூடாது. சினிமா பார்க்க வரும் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்க கூடாது.

சினிமா தியேட்டருக்குள் வரும் ரசிகர்கள் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் எதையும் எடுத்து வரக்கூடாது. குடிபோதையில் தியேட்டருக்குள் வரக்கூடாது. மேடை மீது ஏறி ஆட்டம் போடக்கூடாது. தியேட்டரில் உள்ள பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டால் ரசிகர் மன்றங்களே பொறுப்பேற்க வேண்டும். அதற்கு உரிய இழப்பீடு தர வேண்டும். ரசிகர் மன்ற காட்சிகள் திரையிடும்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கும் சம்பந்தப்பட்ட ரசிகர் மன்றங்களே பொறுப்பேற்க வேண்டும். ரசிகர்களை ஒழுங்குபடுத்த போதுமான தன்னார்வலர்களை ரசிகர் மன்றத்தினர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள்ள நியமிக்க வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்