கோயம்புத்தூர்
கூழாங்கல் ஆற்று பகுதியில் மக்னா யானை நடமாட்டம்
|கூழாங்கல் ஆற்று பகுதியில் மக்னா யானை நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
வால்பாறை
கூழாங்கல் ஆற்று பகுதியில் மக்னா யானை நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
மக்னா யானை
தர்மபுரியில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த மக்னா யானை ஒன்று, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, மானாம்பள்ளி வனச்சரக மந்திரிமட்டம் வனப்பகுதியில் விடப்பட்டது. அங்கிருந்து வெளியேறிய மக்னா யானை, சரளபதி பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்தது.
பின்னர் மீண்டும் அந்த யானையை பிடித்து, சின்னக்கல்லாறு வனப்பகுதியில் விட்டனர். ஆனால் அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாமல், அங்கிருந்து இடம்பெயர்ந்து ஊசிமலை டாப், அக்காமலை புல்மேடு, சிங்கோனா, சிறுகுன்றா, பச்சமலை உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு வருகிறது.
நடைபயிற்சி
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு உள்ள மக்னா யானை, அதிகாலை நேரத்தில் அருகில் உள்ள கூழாங்கல் ஆற்று பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்கிறது.
அங்குள்ள சாலையில் அதிகாலை நேரத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த சமயத்தில், மக்னா யானை நடமாட்டம் உள்ளதால், அவர்கள் பீதி அடைந்து உள்ளனர். இதனால் அவர்களை வனத்துறையினர் எச்சரித்து உள்ளதோடு மக்னா யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தொந்தரவு ஏற்பட்டால்...
இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் பார்கவே தேஜா கூறுகையில், ஒரு சிறப்பு முயற்சி அடிப்படையில் மக்னா யானை வால்பாறை வனப்பகுதியில் விடப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஏதாவது தொந்தரவு ஏற்படும் பட்சத்தில் வேறு வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.