< Back
மாநில செய்திகள்
யானைகள் நடமாட்டம்; சுருளி அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை...!
மாநில செய்திகள்

யானைகள் நடமாட்டம்; சுருளி அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை...!

தினத்தந்தி
|
10 Sept 2023 10:42 AM IST

யானைகள் முகாமிட்டுள்ளதால் 2-வது நாளாக சுருளி அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கூடலூர்,

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் இங்கு புனித நீராடி செல்கின்றனர்.

அமாவாசை உள்ளிட்ட நாட்களில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் அருவி பகுதிக்கு வருகின்றனர். தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. தண்ணீர் தேடி வன விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன. குறிப்பாக யானைகள் மங்கலதேவி கண்ணகி கோவில் மற்றும் சுருளி பகுதிக்கு கூட்டம் கூட்டமாக வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு யானைகள் சுருளி அருவி அருகே முகாமிட்டதால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன்பின் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று மீண்டும் யானைகள் கூட்டமாக அருவி பகுதியில் முகாமிட்டன. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றும் அதே பகுதியிலேயே யானைகள் இருப்பதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

யானைகள் இடம் பெயர்ந்த பின்னர் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர். தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்